Srirangapankajam

April 26, 2008

PESUM ARANGAN-16

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:28 pm

பொய்கையாழ்வார் கருவரங்கத்துள் கிடந்த போதே திருவரங்கன் அவருக்கு ஸேவை புரிந்துள்ளான். இவர் பிரஹ்லாதன் போன்று கருவிலேயே திருவையடைந்தவர்.

“ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் – அன்று
கருவரங்கத்துள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கமேயான் திசை” – (முதல் திருவந்தாதி-6)

(நான் ஒன்றும் அறியாமல் கர்ப்பத்திலிருந்த காலத்தின் போது, திருவரங்கத்துளிருந்த பெரிய பெருமாளையும் அவனது திருக்கல்யாண குணங்கள், ரூபம் முதலியனவற்றைக் கண்டேன். அவ்வாறு கண்டவுடன் கைத்தொழுதேன். என்றும் நிலையாகயுள்ளச் பெருஞ்செல்வத்தைத் தவறவிட்டு
நிலையில்லாத செல்வங்களை நினைத்திருக்கும் ஏழைகளே! என்னுடைய கர்ப்பத்திலிருந்து நான் வெளியே வந்தவுடன் அவனை மறப்பேன் என்று நினைத்தீர்களா? அவனுடைய ரூபம், குணம் போன்ற எதையும் நான் மறக்க மாட்டேன். தன்னிடம் வந்தவர்களை தன்னை விட்டு நீங்க முடியாமல் செய்பவனை நான் என்றும் மறக்க மாட்டேன்!)

ஏழை என்பதற்கு இவர் பெரியபெருமாளை இழந்து நிற்பவர்கள், பெருஞ்செல்வம் படைத்தோராயினும் ஏழையே என்கிறார்.

பரம ஏழையாக இவனடி சேர்ந்தாரை இன்பமாக வைத்திருப்பான்.
தன்ராஜ் என்றொரு வடக்கத்திக்காரர். பரம ஏழை! நம் பாஷையும் அறியாதவர்.
எப்படியோ தட்டு தடுமாறி, சுமார் ஒரு 50 வருஷம் முன்பு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து விட்டார். கோவிலில் கிடைத்த பிரஸாதத்தினையுண்டு ஏதோ ஸேவார்த்திகள் அளித்த காசையும் கொண்டு ஜீவித்திருந்தார். தினசரி நம்பெருமாள் ஸேவிக்காமலிருக்க மாட்டார். என் தகப்பனாருக்கு நெருக்கம் ஆனார். தகப்பனார் அவனிடம் ஒருநாள் “அரங்கனுக்கு வெண்ணையென்றால் பிரியமானது! “நவநீத சுபாஹாரினே நம:” என்று கூட ஒரு நாமாவளியுண்டு. நீ தினசரி உன் சக்தியேற்றபடி வெண்ணை அமுது செய்து வா” என்றார். அன்றிலிருந்து அவன் பிச்சையெடுத்த காசில் கொஞ்சம் வெண்ணை வாங்கி இலையில் வைத்து அமுது செய்து வந்தாh. நாளாக நாளாக அவனது ஸேவை வடக்கேயிருந்து வரும் ஸேவார்த்திகளிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள ரங்கா ரங்கா கோபுரத்திற்கு எதிரிலேயே
ஒரு வீட்டை வாங்கி சத்திரமாக மாற்றி இவரை அங்கு அமர்த்தினர். பசு மாடு போஷித்து தினசரி பசுவெண்ணை வெள்ளிக்கிண்ணியில் வைத்து நிவேதனம் செய்ய ஆரம்பித்தார். இவரது கீர்ததி பெருகி மிகப்பெரிய ஆளானார். எவ்வளவு பெருமை வந்து இவரைச்சேர்ந்த போதும் பெருமாளிடத்து மிகவும் அன்புடையவராய், அனைவரிடத்து பெரும் பணிவுடையவராய், கனிவோடு தன் சத்திரம் வந்தவர்களைக் காப்பவராய் வாழ்நது ஒரு நன்னாளில் அரங்கனடிச் சேர்ந்தார். இன்றும் இந்த தன்ராஜ் சத்திரம் உள்ளது. அவர் ஏற்படுத்திய ‘வெண்ணையமுது’ நடந்து கொண்டிருக்கின்றது. அரங்கன் வந்தாரை வாழ வைப்பவன். ஏழைக்கு இரங்கும் பெருமாள்!.

அரங்கனின் குணாதிசயத்தையும் ஒரே பாட்டில் வெளிப்படுத்துகின்றார்.
தன்னிடம் வந்தவர்களை தன்னை விட்டு நீங்க முடியாமல் செய்பவன் என்கிறார். உண்மைதான். சிலநாட்களே தொடர்ந்து தரிசித்தால் போதும் அதன் பிறகு அவர்களால் இவனது தரிசனம் இல்லாமல் இருக்கமுடியாது. ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்கு ஒருவராவது ரங்கதரிசனம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். நித்யபடி பெருமாள் ஸேவிக்கின்றவர்கள் எந்த ஊரினைக் காட்டிலும் இந்த ஊரில் அதிகமே!. இவர்களுக்கு பெருமாள் ஸேவை ஒன்றுதான் முக்கியம். யார் எது சொன்னாலும், அலட்சியப்படுத்தினாலும்,
ஏன் அவமானப்பட்டாலும் கூட பெரிது பண்ணமாட்டார்கள். பெருமாள் ஸேவையினில் நிறைவுகொண்டு சென்று விடுவார்கள். அரங்கன் அந்தளவுக்கு அவர்கள் ஒவ்வொருவரோடும் அந்தரங்கமானவன். பெருமாளுக்கு சாற்றுப்படியைப் பார்த்து எந்த அர்ச்சகர் முறை என்று கூட சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு அவனை நெருக்கமாகக் கவனிப்பவர்கள்.

-Posted on 26th April’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: