Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-8

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:37 pm

அரங்கனின் கிருபை விசாலமானது. எப்போது, எப்படிச் செய்யவேண்டுமோ, அதன்படி சதுரங்கத்தில் கவனமாக காய் நகர்த்தி விளையாடுவது போல, நம்மை அவன் அரவணைத்துக் கொள்வான். இதில் நாம் செய்யவேண்டிய முக்கியமானது என்னவென்றால் அவன் கிருபைக்கு ஆளாக பூர்ணமாக ஆசைப்படுவதொன்றுதான்.

”அகிஞ்சனோ அநந்ய கதி: சரண்ய: த்வத்பாத மூலம் சரணம் சரணம் ப்ரபத்யே”

என்று எவனொருவன் எனக்கு உன் திருவடிகளைப்பற்றுதல் தவிர வேறு கதியில்லையென்று சரணாகதியடைகின்றனரோ, அவனுக்கு இவன் அடிமையாகிவிடுகின்றான். ”அத்தகையவர்கள் ஞானிகள், தபஸ்விகள், கர்மானுஷ்டர்கள் ஆகியோரைக் காட்டிலும் எனக்கு அருமையானவர்” என்கின்றார் கீதையில்!. அரங்கன் பக்தர்களுக்கு சுலபன்.

”அவன் என்னையாளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் – அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத் தரவணையின் மேல்”

– திருமழிசையாழ்வார்-நான்முகன் திருவந்தாதி-(30)

விபீஷணன் ஸ்ரீரெங்கஸ்ரீயை தற்காலிகமாக இறக்கி வைத்த இடத்தினருகில், உறையூரினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழப்பேரரசன் தர்மவர்மா அங்கே அரங்கன் நிரந்தரமாக தங்க வேண்டி அருந்தவம் செய்து கொண்டிருந்தான். அவனது நிஷ்டை கலைகின்றது. எதிரே அரங்கன் ஜ்வலிக்கும் ரெங்கவிமானத்துடன் எழுந்தருளியுள்ளார். அவனுக்குத் தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்றே புரியவில்லை. நினைவு வந்த போதெல்லாம் அடிக்கடி மூர்ச்சையாகின்றான். தர்மவர்மாவின் தவத்தினை நிறைவு செய்தான் அரங்கன்! தர்மவர்மா அரங்கனை பரம ப்ரீதியுடனே தன் கூட்டத்தாருடன் சேர்ந்து பூஜித்தார். விபீடணன் தனது அனுஷ்டானங்களை காவிரிக்கரையில் முடித்து விட்டு வந்து பார்த்தால் இங்கு ஒரே கோலாகலம்!.

விபீஷணன் மறுநாள் இலங்கைக்குச் சென்று ஆதிபிரம்மோற்சவம் நடத்துவதற்காக முற்பட்டான். தர்மவர்மா அவரை திருவரங்கத்திலேயே அந்த உற்சவத்தை நடத்தித்தர பிரார்த்தித்தான். வெகுவிமரிசையாக முதன்முதலாக திருவரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்றது. இன்று திருவரங்கத்தில் நடைபெறும் பிரும்மோற்சவங்களுக்கெல்லாம் ஆதியும் இதுவேயானது. பிரும்மோற்சவம் முடிந்து விபீடணனால் விமானத்தினைத் தூக்க இயலவில்லை. அரங்கன் காவிரிக்காகவும், தர்மவர்மாக்காகவும், நமக்காகவும் நமது சந்ததியினர்க்காகவும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட தீh;மானித்துவிட்டார். நாம் அனைவரும் அறிந்த அரங்கனின் பிரசித்தப்பெற்ற சேர்த்தி பங்குனி உத்திரம் மட்டும்தான். ஆனால் அரங்கன் நான்கு சேர்த்தி உற்சவம் கொண்டாடுகின்றார். இதில் சித்திரையில் இரண்டு! பங்குனியில் இரண்டு!. வருஷ ஆரம்பமான சித்திரையில் சித்ராபெளர்ணமியன்று காவேரிக்கரையில் முதல் சேர்த்தி. காவேரியில் பெருமாளின் மாலை மரியாதைகள் எல்லாம் சேர்த்து சேர்த்தி!. அதே மாதத்தில் ஸ்ரீராமநவமியன்று குலசேகராழ்வார் குமாரத்தியான சேரகுலவல்லியுடன் சேர்த்து. இரண்டாம் சேர்த்தி!. பங்குனி 6ம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் சேர்த்தி! உத்திரத்தில் ரெங்கநாயகியுடன் சேர்த்தி! வருஷ ஆரம்பத்தினை கலயாணத்துடன் ஆரம்பித்து வருஷ முடிவினையும் கல்யாணத்துடன் முடிக்கின்றார் இந்த வைபோக ரங்கன்!

நீயும், தர்மவர்மா ஆகியிருவருமே மிக உன்னதமானவர்கள். எனக்கு அருமையானவர்கள். நீ ராட்சஸனாயிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆகாயமார்க்கமாக வந்து தரிசிக்கமுடியும்!. நீ தர்மவர்மாவுக்கு கிருபை செய்!” என்று யாருக்காகவும் எந்த சிபாரிசும் தேவைப்படாத அந்த கிருபாளு ”தர்மவர்மாவுக்கு கிருபை செய்” என்று இந்த மாமனிதருக்காக இராட்சஸ விபீடணனிடம் வேண்டுகின்றார்!. பெரியபெருமாளின் சங்கல்பத்தைத் தெரிந்து கொண்ட விபீடணன் பிரிய மனதில்லாமல் இலங்கைக்கு புறப்படுகின்றான். அவனது மேல் மிக்க அன்பு கொண்ட அரங்கன் அவன் செல்லும் திக்கான தெற்கு நோக்கி திரும்பி படுத்து அவனை கண்களால் கடாக்ஷித்தவாறு கண்வளருகின்றார்!
-Posted on 13th april’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: