Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-7

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:35 pm

பக்தியானது அதனைக் கடைப்பிடிக்கின்றவர்களை பரவசப்படுத்துகின்றது. பகவானையோ அந்த உண்மையான பக்தனிடத்து பந்தப்படுத்துகின்றது. இந்த பந்தம் என்றும் மாறாத, குன்றாத, வளம் நிறைந்த பந்தம். ஒரு வேளை பக்தன் மறந்தாலும் கிருபாளு அவன் மறக்க மாட்டான்.

துர்வாசர் துரியோதனின் தூண்டுதலின் பேரில் வனவாசம் செய்து கொண்டிருக்கும் தருமபுத்திரர் குடில் சென்று தன்னுடன் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கும் சமையல் செய்து வை என்று சொல்ல, பாஞ்சாலி ஏதுமில்லாத அந்த வனத்தில் திகைக்கின்றாள். பரந்தாமனை நினைக்கின்றாள். கண்ணன் வருகின்றான். கண்ணன் பசி என்கிறான். திரௌபதி அழுகின்றாள். கண்ணன் தான் அவளிடம் வனவாசம் ஏகியபோது கொடுத்த அட்சய பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்கிறான் அதில் கையை விட்டு துழாவுகின்றான். ஒரே ஒரு கீரை இலையிருந்தது. பெரியவர்கள் என்றும் உணவு உண்ணும்போது ஸர்வம் ஹரிப்ரியதாம் என்று எல்லாமிடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஹரியை நினைத்து உண்ணுவர். அந்த உலகமுண்ட பெருவாயன் திருப்தியுடன் அந்த கீரையிலையொன்றை உண்டபோது துர்வாசரும் அவரைச் சார்ந்த பத்தாயிரம் பேரும் வயிறு நிறைந்து ஏப்பம் விட்டனராம். இதனை நினைவில் கொண்டுதான் பகவான் திரௌபதியைப் போன்று, பக்தன் ஒரு துளசிதளத்தினை (பத்ரம்) அர்ப்பணித்தால் போதும் என்கிறார்.

ஆதிமூலமே என்று கஜேந்திராழ்வான் கதறியபோது, அம்மூலப்பரம்பொருள் கருடவாகனத்தில் சங்கு சக்ரதாரியாய்; பிரதட்சயமாகிறார். அந்த மரணவேதனையிலும் அந்த யானை அக்குளத்திலுள்ள ஒரு தாமரைப்பூவினைப் பறித்து, பெருமாளின் திருவடிகளில் பக்தியுடன், தும்பிக்கையினால் எறிகின்றது. பரம்பொருள் பரம சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கின்றான். இதனை பகவான் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றான். அதனால் “புஷ்பம்” என்கிறான்.

எதற்கும் கைத்தாழ அவசியமேயில்லாத கருணாகரன் சபரியின் அன்புக்குக் கட்டுண்டு அவள் கொடுத்த ருசிகரமான பழங்களை கைத்தாழ்ந்து பெற்றான். இதனை நினைத்து “பழம்” என்கிறான்.

இவையெல்லாம் இல்லாவிடினும் ஒரு உத்தரணி தீர்த்ததையாவது எனக்கு அன்புடன் அர்ப்பணி என்கிறான். இதைதான் “தோயம்” என்கிறான். (இதனை உபாயமாகக் கொண்டு இத்தீர்த்த கைங்கர்யத்தை ஸ்ரீஇராமனுஜர் பேரருளானுக்குச் செய்தார்.)

இவர்களையெல்லாம் மறக்க முடியாமல்தான் பகவானும் கீதையில் “பத்ரம் புஷ்பம் பலம் தோயம், யோமே பக்த்யா: ப்ரயச்சதி” என்கிறார். ஆடம்பரம், பகட்டு, படாடோபம் ஏதுமில்லாத உளமார்ந்த எளிமையான அர்ப்பணிப்பில் அவன் பெருமகிழ்வடைகின்றான். இதனை ஸ்ரீஇராமனுஜர் தனது பாஷ்யத்தில் கண்ணன் அருளிய இந்நான்குமே அவன் காணக்கிடக்காதது போன்றும், இதற்காகவே அவன் காத்திருந்து ஆசையோடு ஏற்றுக்கொள்கிறான் என்றும், ஸ்ரீ மத்வர் தனது பாஷ்யத்தில் பகவான் எங்கு மக்கள் தன்னை ஆராதிப்பதற்கு மிக அரியவர் என்று நினைத்து இதர தேவதாந்திரங்களை நாடிச் சென்று விடுவார்களோ என்று கருதி, தன்னுடைய எளிமையை வெளிப்படுத்துகின்றார் என்கிறார்.

பெருமாளே பெருமாளை ஆராதித்தினால் ஸ்ரீரெங்கநாதன் பெரியபெருமாள் ஆனார். ஸ்ரீராமன் வனவாசம் சென்ற பின்பு இந்த ஸ்ரீரெங்கஸ்ரீயை யார் ஆராதனைச் செய்திருப்பார்? இதுபற்றிய குறிப்பு ஏதுமில்லையானாலும் கண்டிப்பாக ஸ்ரீபரதன்தான் ஆராதனை செய்திருப்பான்! ஸ்ரீரெங்கநாதனையும், ஸ்ரீராம பாதுகைகளையும் அவன்தான் ஆராதனை செய்து வந்திருப்பான். இந்த பாதுகாதேவியானவள் ஸ்ரீராமனை விட்டு பிரிந்தாலும் பிரிந்திருப்பாள். ஆனால் ஸ்ரீரெங்கநாதனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவன் அப்போது கோயில் கொண்டிருந்த அயோத்தி மாநகருக்கே திரும்பினாள் பரதனின் சிரம்மேல் அமர்ந்து கொண்டு!. பாதுகையினால் முதலில் அனுக்கிரஹமடைந்தவன் பரதாழ்வான்தான்.

ஸ்வாமி தேசிகன் தனது பாதுகா ஸஹஸ்ரத்தில் கூறுகின்றார்
“ப்ருசாம் ஆதுர ஸஹோதர ப்ரணய கண்டந ஸ்வைரிணா
பதேந கிம் அநேந மே வநம் இஹ அவநாத் இச்சதா
இதீவ பரிஹாய தந்நிவவ்ருதே ஸ்வயம் யத்புரா
பதத்ரம் இதம் ஆத்ரியே த்ருத ஜகத் த்ரயம் ரங்கிண:”

பொருள் – இராமன் கானகம் சென்ற வருத்தத்தில் இருந்த பரதன், இராமனிடம் சென்று அவனை மீண்டும் நாட்டிற்குத் திரும்புமாறு அழைத்தான். அப்போது பரதனை இராமன் கண்டித்து, மறுத்து விடுகிறான். இப்படியாக இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக வந்த இராமன், நாட்டை விட்டுக் கானகம் புகுவதையே பெரிதும் விரும்பியது கண்ட பாதுகை, ”இவன் (இராமன்) திருவடிகளால் நமக்கு ஆவது என்ன?” , என்று மனம் வருந்தினாள். ஆதலால் அந்தத் திருவடிகளை விட்டு, தான் மட்டும் நாட்டிற்கு வந்தாள். மூன்று உலகையும் காக்கும் அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்கிறேன்.

விளக்கம் – இராமனின் திருவடிகளை விட்டுப் பாதுகைகள் பிரிந்தமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறார் – இராமன் பரதனைக் கடிந்து கொண்டது, நாட்டை ஆளவேண்டிய கடமை இருக்கக் கானகம் விரும்பியது – என்ற காரணங்களைக் காட்டுகிறார்.

இராவண வதம் முடிந்து சீதையினை மீட்டு ஸ்ரீராமர் அயோத்தி திரும்புகின்றான் பட்டாபிஷேகம் முடிகின்றது. இந்த யுத்தம் வெற்றிகரமாக நடைபெற எல்லாவிதங்களிலும் உதவிய வீபிஷணருக்கு ஸ்ரீரெங்கஸ்ரீயை இராமர் தந்தருளுகின்றார். பெறற்கரிய பேறுபெற்ற விபீஷணர் ஸ்ரீரெங்கஸ்ரீயை
இலங்கைச் செல்லும் வழியில் உபயகாவேரி மத்தியில் சந்திரபுஷ்கரிணியருகில் அனந்த பீடத்தில் தற்காலிகமாக ஸ்தாபிதம் செய்கின்றார்.

-posted on 11th April’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: