Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-5

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:30 pm

“ஞானப் பானா” என்று மலையாளத்தில் ஒரு அற்புத கிரந்தம் உள்ளது. இன்னமும் குருவாயூரில் அதிகாலை குருவாயூரப்பன் இதனைக் கேட்டுதான் கண்விழிக்கின்றார். இதற்கு சொந்தக்காரர் ஸ்ரீ பூந்தானம் நம்பூதிரி. இவர் இந்நூலுக்கு முகவுரை எழுத ஸ்ரீநாராயண பட்டத்ரியை கேட்டுள்ளார். பட்டத்ரி அந்த சமயம் நாராயணீயம் எழுதி மிக பிரபலமடைந்த சமயம். அவர் பூந்தானத்திடம் “நீ ஒரு பாஷாகவி (தேவபாஷையான ஸமஸ்கிருதம் தவிர்த்தவர்கள்) – ஸமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டுவா, முகவுரை தருகிறேன்” என்கிறார். இம்மாதிரி இவர் பேசியது குருவாயூரப்பனுக்கு பயங்கர வருத்தம்!. பட்டத்ரியை விட்டு நாராயணீயம் எழுதியபோது போன வாதநோய் அவருக்கு திரும்ப வந்து விட்டது. பட்டத்ரியின் கனவில் குருவாயூரப்பன் தோன்றி ” உன்னுடைய விபுக்தியை விட அவனின் பக்தி எனக்கு பெரிது – அவன் சமாதானமடைந்தால் உனக்கு இந்நோய் குணமாகும்!” என்றருளினார். பூந்தானத்தின் அன்பினால் பட்டத்ரி வாதநோய் நீங்கப்பெற்றார்.
இந்த பூந்தானம் நம்பூதிரிக்கு சதா குருவாயூரப்பன் நினைவேதான். கண்ணன் நினைவு எப்போதும் அகலகில்லாதவர். ஒரு சமயம் அவரது ஒரே மகனான உன்னிக்கிருஷ்ணன் முதல் வயது பூர்த்திப் பெற்று ஆயுஷ்ய ஹோமம். இந்த சமயத்தில் அவரது மகன் தவழ்ந்து ஒரு மூலையில் யாருமறிய வண்ணம் சென்றுவிட்டான். அச்சமயம் அவரது வீட்டார்களனைவரும் குளித்துவிட்டு வேறு உடை மாற்றி குழந்தையிருப்பது தெரியாமல் அதன் மேல் ஈரத்துணிகளை போட்டிருக்கின்றார்கள். குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டது.
தாங்கவொண்ணாத் துயரம்! வீட்டார்கள் பூந்தானத்திடம் சொல்லியிருக்கின்றனர்.
அவருக்குதான் குருவாயூரப்பன் ஒருவரே நினைவாச்சே! அதற்கு அவர்

“உன்னி க்ருஷ்ணன் மனசில் களிக்கும்போள்
உன்னிகள் மத்து வேணமோ மக்களாய்”

பொருள் – நமது மனதில் எப்போதும் குழந்தையாக அந்தக் குருவாயூரப்பன் நிறைந்து நிற்கையில், வேறு குழந்தைகள் அவசியமோ?

என்று கூறி பிற்காலத்தில் இன்னும் அதீத பாசம் கொண்டு சதா குருவாயூரப்பனை மனதில் நிறுத்தி அவனது பாதம் சேர்ந்தார். இவர் பக்தியினால் தனது தாங்கவொண்ணாத் துயரத்தினைக் கூட குருவாயூரப்பன் நினைவாகவே மாற்றி அப்பன் அவனிடமே உறைந்த பெருந்தகை! இவரது பக்திபாரவச்யம் அப்பேற்பட்டது. இப்பேற்பட்ட மகான்கள் இன்றும் கூட வாழ்கின்றனர். அவர்களனைவருடனும் அரங்கன் இன்றும் பேசுகின்றான். சிலரது வரலாறு தெரிகின்றது. சிலரது வரலாறு பகவானோடு மட்டும் கரைந்துவிடுகின்றது.

இஷ்வாகு ஸ்ரீரெங்கநாதரை எப்படியாவது அயோத்தியில் பிரதிஷ்டை பண்ணனும் என பெரும் பிரயத்தனத்துடன் கடுமையான தபஸ்ஸில் ஈடுபடுகின்றான். தேவலோகமே இவனது தபஸ்ஸினால் அல்லோலப்படுகின்றது. இந்திரன் தொடுத்த வஜ்ராயுதமே இவரது ஸ்ரீரெங்க தபஸ்ஸினால் பயனற்று விடுகின்றது. ஸ்ரீரெங்கநாதர் பிரும்மாவிடம் தன்னை இஷ்வாகுவிடம் ஒப்படைக்குமாறு சொல்கின்றார். தான் அன்றைய இரவு நேர பூஜைக்குள் பிரும்மலோகம் திரும்பிவிடுதாகவும் அரங்கன் அவரிடம் கூறுகின்றார். ஆக நம் கணக்கிற்கு இன்னமும் மூன்று யுகங்கள் கழியும் இந்த நிலையிலும், பிரும்மாவின் ஒரு நாள் கணக்கு பூர்த்தியாகவில்லை! இன்னமும் பிரும்மலோகத்தில் பகல் பொழுதுதான் நடந்துகொண்டிருக்கின்றது!.
இப்பொழுது சற்று யோசித்துப் பாருங்களேன். 1000 பிரும்ம வருடங்கள் இந்த ஸ்ரீரெங்கஸ்ரீக்காக பிரும்மா தவம் இருந்தான் என்றால் எவ்வளவு யுகங்கள் அவன் தவமிருந்திருக்க வேண்டும். பிரும்மன் எளிதில் அடைந்திடாத இந்த ஸ்ரீரெங்கஸ்ரீயை நாம் எளிதில் தரிசிக்கின்றோம் என்றால் நம்முடைய பாக்யத்தினை நினைவில் கொள்ளுங்கள்!

(ஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் புத்தகத்தில் வைவஸ்வத மனு ஸ்ரீரெங்கவிமானத்தைக் கைவரப்பெற்றதாகவும், அவருக்கு பத்து பிள்ளைகள் எனவும், இவர்களில் மூத்தவரான இஷ்வாகுவிற்கு அவர் ஸ்ரீரெங்கவிமானத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்)

-மேலும் பேசுவோம் – posted on 6th April’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: