Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-4

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:28 pm

பல முனிவர்கள், ஞானியர்கள் பலகாலம் தவமிருந்த இடங்களில், சில மணித்துளிகளாவது மனதினை ஒரு நிலைப்படுத்தி தியானியுங்கள். உங்களுக்குத் தெரிந்த மந்திரங்களை ஜபியுங்கள். பகவானை ஆரவாரமின்றி மனதினுள் உள்வாங்கி தரிசித்துப் பாருங்கள்!. பூர்ண அமைதியடைவீர்கள்!. அளப்பரிய ஆன்ம சக்திகளைக் கண்டிப்பாக அடைவீர்கள்!. பல பிரச்சனைகளிலிருந்து விடுதலைப் பெறுவீர் அல்லது அதனை சமாளிக்கும் சக்தியையாவது பெறுவீர்கள்!. நம் பூர்வாச்சாரியர்கள் வருங்காலத்தையறிந்து அஞ்ஞானத்தில் உழலும் நமக்காகவே பலவும் மிக ஆச்சர்யமாக, வெகு சாதுர்யமாக செய்துள்ளனர். பிள்ளைலோகசார்யா; தன்னையும் ஒரு அஞ்ஞானியாக சேர்த்துக் கொண்டு,

அஜ்ஞாநத்தாலே பிரபந்நர் அஸ்மதாதிகள்
ஞாநாதிக்யத்தாலே பிரபந்நர் பூர்வாச்சாரியர்கள்
பக்திபாரவச்யத்தாலே பிரபந்நர் ஆழ்வார்கள்

-(ஸ்ரீவசனபபூஷணம் – உபாயம் – 43வது சூத்திரம்)

என்றருளிகின்றார். பிரபந்நர் என்றால் பிரபத்தியடைந்தவன் (சரணாகதியடைந்தவர்) என்று பொருள். அஸ்மதாதிகள் என்றால் அவரும் அவரைச் சேர்ந்த நாமும் என்று பொருள் கொள்வோம். (எப்பேர்பட்ட மகான் நம்மையும் சேர்த்துக் கொள்கின்றார்!) நாம் அனைவரும் நீசனேன், நிறையொன்றுமிலேன்! என்று கதறி பகவானின் பரம தயவினாலும் ஆச்சார்ய கடாக்ஷத்தினாலும் பிரபந்நர் ஆகின்றோம். நம்மிடம் ஞானம், பக்தி குறைவு. அஞ்ஞானம்தான் அதிகம். ஞானத்தின் ஆதிக்கத்தினால் பிரபந்நர் பூர்வாச்சாரியர்கள். இவர்களிடம் அஞ்ஞானம் குறைவு. பக்தியை விட ஞானம் அதிகமிருக்கும். அதன் உபாயத்தினாலே இவர்கள் பிரபந்நர்கள். பெருமாளின் மேல் அளவற்ற அன்பினாலும், பக்தியினாலும் பிரபந்நானவர்கள் ஆழ்வாராதிகள். இவர்கள் பக்தி உபாயத்தினால் பகவானும் கட்டுண்டான். இவர்களும் பூர்ண சரணாகதியடைந்தனர். இவர்களது பக்தியினால் அஞ்ஞானம் அழிந்து ஞானாதிக்கமுமடைந்தனா;. இவர்களது பக்திபாரவச்யம் அப்பேற்பட்டது!. ஸ்ரீமணவாளமாமுனிகள் “இட்டக் கால் இட்ட கை” என இவர்களின் பக்தி பாரவச்யத்திற்கு வியாக்யானம் எழுதுகின்றார். பகவதனுபவம் வந்துவிட்டால் கை, கால்கள் எந்த நிலையிலிருந்ததோ அதே நிலையிலேயே இருப்பார்களாம். துளிக் கூட அவயங்கள் அசையாதாம்.!
இவ்வனுபவத்தில் அவர்கள் இதேப் போன்று நாட்கணக்கில் ஏன் மாதக் கணக்கில் கூட இருந்திருப்பார்களோ என்னவோ?

ஸ்ரீரெங்கவிமானத்துடன் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்திலிருக்கும் போது ஸ்ரீரெங்கநாதர் பிரும்மாவிற்கு பிரதட்சயமானார். எனவே ஸ்ரீரெங்கநாதனின் ஜன்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். “ரோஹிணி ஸ்ரீஜன்மதாராய நம:” என்று கூட ஒரு நாமாவளி உண்டு!. (ஆனால் ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர் தன்னுடைய ஜன்ம நட்சத்திரத்தினை விடுத்து தாம் ஸ்ரீரங்கத்தில் வந்திறங்கிய ரேவதி நட்சத்திரத்தன்று புறப்பாடு, திருமஞ்சனம் கண்டருளுகின்றார்!. உபய காவேரி மத்தியில் சயனம் கொண்டதில் அவ்வளவு மகிழ்வு அவருக்கு!. (ஸ்ரீ உ.வே.கிருஷ்ணமாச்சாரியார், தமது கோயிலொழுகு புத்தகத்தில் ‘வியாழன் ரேவதியிலிருந்ததாகக் கூறியுள்ளார்)

பிரும்மாவினைப் பார்த்து ரங்கநாதர் பேசுகின்றார்.
“உம்முடைய தவத்தினாலும், போற்றுதலினாலும் நான் மிகவும் மகிழ்வடைந்தேன்! எதிலும் அடக்கமுடியாத என் ப்ரபாவத்தினையடக்கி, உமக்குத் தரிசனம் கொடுப்பதற்காக முதன்முதலாக அர்ச்சாரூபியாய், அரங்கனாய் அவதரித்தேன்! என்னுடைய அர்ச்சாவதாரத்தை நீர் முக்தி பெறுவதற்காக பூஜியும்! இந்த பிரபஞ்சத்தினுள் க்ஷீராப்தி, சூர்யமண்டலம், தேவலோகம் ஆக இம்முன்றிடங்களிலிருப்பதால் எனக்குத் “த்ரிதாமா” என்று பெயர். நான் கல்பந்தோறும் ஆயிரக்கணக்கான அவதாரங்களெடுக்கின்றேன்! நான் அவதாpப்பது பக்தர்களை ரக்ஷிப்பதற்காகவே! இந்த ரக்ஷனத்திற்காக நான் தாரு, உலோகம், சிலை ஆகியவற்றில் அர்ச்சாரூபியாக எல்லா த்வீபங்களிலும், தேசங்களிலும், புண்ணிய தீர்த்தங்களிலும், ஆலயங்களிலும், கிரஹங்களிலும் அவதரிப்பேன்! எனக்கு அர்ச்சனம், ஸ்தோத்திரம், கீர்த்தனம், நமஸ்காரம் முதலியவற்றைச் செய்பவர் பரமபதம் அடைவர் ” என்றருளி தன்னை ஆராதிக்கும் விதியையும் பிரும்மனுக்கு உபதேசித்தருளினார். பிரும்மாவோடு சேர்ந்து தக்ஷப்ரஜாபதி, ஸ்வயம்புவ மனு, சூர்யனும் பூஜித்து வந்தனர். சூரியனின் வம்சமான மனு பூஜித்தார். அவர் தன் புத்திரனான இஷ்வாகுவிற்கும் இதனைப்பற்றிய ஞானத்தினையுண்டாக்கினார். சூர்யகுல வம்சமான மனு, இஷ்வாகு போன்ற ராஜாக்களெல்லாரும் எந்த லோகத்திலும் சஞ்சாரம் பண்ணும் சக்திப் பெற்றிருந்தனர்..

-Posted on 4th April’2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: