Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-3

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:27 pm

பிரம்மதேவனிடத்தில் பகவான் வேதமனைத்தையும் ஒப்புவித்து, நான்
முன்பு உனக்கு இவற்றை உபதேசிக்காததினால் இவை உன்னை விட்டு மறைந்து போயின! ஆச்சார்யன் முகமாக உபதேசம் பெறாமல் தானாகக் கற்ற வித்தை நசித்துப்போம்! இப்போது அவை என்னால் உனக்கு கைவரப்பெற்றது எனக்கூறி ‘பிரணவத்தினை’ அவனுக்கு உபதேசிக்கிறார்.
வேத சாஸ்திரங்களிலுள்ளபடி ஸ்ருஷ்டிப்பாயாக! என பிரும்மாவினை அனுக்கிரஹிக்கின்றார். பகவானின் ஆக்ஞைபடியே பிரும்மாவும் செயல் புரிகின்றார். பிரும்மாவிற்கு பெருமாள் மத்ஸ்ய, கூர்ம, ஹயக்ரீவ அவதாரங்களாகப் பார்த்து அவரது உண்மை சொரூத்தினைக் காண ஆர்வம் மிகுந்தது. பகவானின் உண்மையான சொரூபத்தினையடைய தவம் செய்ய ஆரம்பித்தார். சில பல வருடங்களல்ல! ஆயிரம் பிரும்ம வருடங்கள்! இது நம்முடைய கணக்கிற்கு பல்லாயிரக் கணக்கான மனிதவருடங்கள் வரும்!.
தவத்தின் பயனாக க்ஷீராப்தியிலிருந்து ஸ்வயம் வியக்தமாய், தேஜோமயாய், பிரணவ ரூபத்துடன் ஸ்ரீரங்கவிமானம் கோடிசூர்ய பிரகாசமாய், வேதமூர்த்தியாம் கருடன் வஹித்து கொணடிருக்க, என்னைப் பெற்றுக் கொள்! என பிரும்மாவிற்கு அரங்கன் ஆணையிடுகின்றான்! தன்னைப் பெற்றவனைப் பெற்றதில் பிரும்மாவிற்கு பரம சந்தோஷம்!

எளிதில் கிடைக்கும் எதுவுமே நமக்கு துச்சம்தான்!. அதனுடைய அருமை, பெருமை நமக்குத் தெரியாது. ஏனென்றால் நாம்தான் அதற்காக எதுவுமே பிரயத்தனப்பட்டதேயில்லையே!. இந்த ஸ்ரீரெங்கநாதனைப் பெற பிரும்மா தொடங்கி நம் ஆச்சார்யர்கள் பட்ட தவம், சிரமம், முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல! அவை விவரிக்க இயலாதது! என்ன விவரித்தாலும் நமக்கு புரியாது!. நாம் அக்கறைப் பட்டால்தானே நமக்கு புரிவதற்கு!. இவ்வளவு தவமிருந்து அடைந்த இப்புண்ணிய மூர்த்தியை நம்மில் பலர் சுமார் இரண்டு மணி நேரம் நின்று தரிசனம் செய்யக்கூட பொறுமையில்லை!
தரிசனத்திற்கு கூட குறுக்குவழி ஏதேனும் யோசிக்கின்றோம்!. காலில் கஞ்சிக் கொட்டினாற்போல் எதற்தெற்கோ பிரயோஜனப் படாததற்கெல்லாம் பறக்கின்றோம். ஏன்! பகவானின் கீர்த்திகளைப் பாடிக்கொண்டு சற்று
நிதானித்து தரிசனம் செய்தால்தான் என்ன? யானையை நன்கு குளிப்பாட்டி விட்டபின் மணலை வாரி தன்மேல் அடித்துக் கொள்ளுமாம். இது போன்றுதான் நாமும் உள்ளோம். ஏன்? வேதாந்த தேசிகர் கூட ‘பகவத் த்யான ஸோபாநத்தில்’ தன்னை யானையாகவும், தன்னைக் கட்ட உதவும் கயிறு நம்பெருமாளின் திருவாபரண ஒளியேயாகும் என்று கூறுகின்றார்.

“ஸ்வாமி தேசிகனின் “ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்”
ச்லோகம் – 7

ஏகம் லீலா உபஹிதம் இதரம் பாஹும் ஆஜாநு லம்பம்
ப்ராப்தா ரங்கேசயிது: அகில ப்ரார்த்தநா பாரிஜாதம்
த்ருப்தா ஸேயம் த்ருட நியமிதா ரச்மிபி: பூஷணாநாம்
சிந்தா ஹஸ்திநீ அநுபவதி மே சித்ரம் ஆலாநயந்த்ரம்

பொருள் – திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள அழகியமணவாளன் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றவல்ல கற்பக மரம் போன்று உள்ளான். தனது வலது திருக்கரத்தை விளையாட்டாகத் தலையணையாக வைத்துள்ளான். இடது திருக்கரமானது முழந்தாள்வரை நீண்டுள்ளது. என்னுடைய சிந்தனை என்பது பெண் யானை போன்று, இந்த இரு திருக்கரங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்ட உதவும் கயிறு எது என்றால், அந்தத் திருக்கரங்களில் உள்ள திருவாபரணங்களில் இருந்து வெளிவரும் ஒளியே ஆகும். இப்படியாக விசித்ரமான ஒரு வகையில் என் மனம் கட்டப்பட்டது.

கருத்து – ஸ்வாமி தேசிகன் போன்று நாமும் அரங்கமாநகர் உறையும் அந்தப் பெரியவனின் தோற்றப் பொலிவில் நமது மனதைக் கட்டி வைக்கவேண்டும்.

– மேலும் பேசுவோம்-(posted on 3rd april’ 2008)

இத்தொடர் எழுதுவதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருப்பது மூன்று விஷயங்களாகும். ஒன்று ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சார்யர் சமீபத்தில் வெளியிட்ட ‘கோயிலொழுகு’. இது இவரின் பலவருட தவப்பயன்!. இவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த தலைப்பு கூட இவரது ‘கோயிலொழுகு’ படித்தபின் தோன்றியதுதான் !

இரண்டாவது, எனது மிக மிக இனிய நண்பர் அஹோபிலதாஸன் க. ஸ்ரீதரன் ஆவார். இவர்தான் இத்தொடர் பற்றி அவரிடம் விவாதித்தப் போது ‘மத்ஸயத்திலிருந்து’ ஆரம்பியும் என அனுக்ரஹித்தார். ஒவ்வொரு முறை இவரிடம் என்ன எழுதப்போகிறேன் என விவாதிக்கும் போதும் ஏதேனும் ஒரு புதுவிஷயம் இவரிடமிருந்து கிடைக்கும்! அற்புத சுரங்கம் இவர்!

மூன்றாவது எனது இந்த வலைத்தளத்தின் மூலமாக, ஸ்ரீரங்கநாதானால் அனுப்பபட்ட அருமையான ‘ஸத்ஸங்க’ நண்பர்கள் சேர்க்கை! இவர்களது ஊக்கமும் உதவியுமில்லாமல் எதுவுமேயிலாது!

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: