Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-2

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:25 pm

வைணவத்தில் ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் நமது ஜீவாத்மா
முக்தி பெறும் வழியான சரணாகதிபற்றி ஒத்த கருத்தையுடையவரர்களாயிருந்தார்கள். இதனை மக்களிடையே மிகவும் எளிய முறையில் வாழ்ந்து காட்டி பரப்பவும் செய்தனர். நாம்தான் சந்திர புஷ்கரிணியிலு்ள்ள மீன்களைப் போல் வாழ்கின்றோம். சந்திர புஷ்கரிணியின் தீர்த்தம் எவ்வளவு மகத்தானது? எவ்வளவு புனிதமானது? அந்த மீன்கள் அதன் பெருமையை உணருமோ? அதற்கு கிடைக்கும் இரையிலேயே குறியாகயிருந்து ஒரு நாள் மடிகின்றது. இதைப்போல்தான் நாமும் நாம் சார்ந்துள்ள வைணவத்தின் கொள்கைகளை, பெருமையை, எளிமையை,
முழுமையை உணராமல், ஏதேதோ மார்க்கங்களுக்குச் செல்கிறோம் – ஏதேதோ தியானம் செய்கிறோம் – யார்யாரையோ வேண்டுகின்றோம்! வேண்டாதவைகளை நம் உள்ளுக்குள் திணித்து, எது முக்யமாக வேண்டுமோ அதனைக் கோட்டைவிட்டு அடுத்த ஈனப்பிறவிக்கு தயாராகின்றோம்.
தொண்டரடிப்பொடிகள் கூறியது போல் மதியிலா மானிடர்களாகிதிரிகின்றோம்! சரி! நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு வருவோம்!..

தன்னைப் படைத்தவரை தரிசிக்க பிரும்மாவிற்கு ஒரு ஆவல். மேலும் மதுகைடபர்கள் வேதத்தினை அபகரித்து ப்ரளய சமுத்திரத்தின் அடியில் சென்றுவிட்டனர். பிரும்மா தான் அமர்ந்திருந்த தாமரைக் கொடியினைப் பிடித்துக் கொண்டு கீழே சமுத்திரத்தில் இறங்குகின்றான்.. இறங்கிக் கொண்டேயிருக்கின்றான். பயம் வந்து விட்டது. கதறுகின்றான். மீன் தன் கண்களாயே குஞ்சுகளை வளர்க்குமாம்! அது போன்று நம்பெருமாளும் மத்ஸயரூபத்தில் அவன் முன் தோன்றி “பயப்படாதே! நானே உன் அப்பன்!”
எனக் கூறி அவனைத் தேற்றினான். இதுதான் அரங்கன் பேசிய முதல் வார்த்தை. ப்ரும்மாவிற்கு மட்டுமல்ல. நம் எல்லாருக்குமே இந்த அரங்கநகரப்பன்தான் தந்தை!. பின்னர் இந்த வேதமுதல்வன் ஹயக்ரீவராய் பிரும்மாவிற்கு ஸேவை சாதித்து, மதுகைடபர்களை சம்ஹாரம் செய்து,
வேதமனைத்தையும் மீட்டு பிரும்மாவிடம் ஒப்புவித்தார். இதனை நாரயண பட்டத்ரியும் நாராயணீயத்தில்நம் அரங்கனை கண்ணனாக பாவித்து 9வது தசகத்தில் பின்வருமாறு விவரித்துள்ளார்.

ஸ்ரீமந் நாராயணீயம்
தசகம் – 9

ஸ்தித: ஸ கமலோத் பவ: தவ ஹி நாபி பங்கேருஹ
குதஸ்வித் இதம் அம்புத உதிதம் இதி அனா லோகயன்
ததீக்ஷண குதூஹலாத் ப்ரதி திசம் விவ்ருத்தாநநம்
சதுர்வதநதாம் அகாத் விகஸதஷ்ட த்ருஷ்ட்ய அம்புஜாம்

பொருள் குருவாயூரப்பா! உனது திருநாபியில் இருந்து தோன்றிய ப்ரம்மன், தான் அமர்ந்துள்ள அந்தத் தாமரி மலர், இந்தச் சமுத்திரத்தில் எந்த இட்த்தில் இருந்து தோன்றியது என வியப்படைந்தான். அதற்காக தனது பார்வையை அனைத்து திசைகளிலும் திருப்பினான். அவ்வாறு ஒவ்வொரு திசையாகத் திருப்பும்போது ஒவ்வொரு தலைகளைப் பெற்று இப்படியாக நான்கு தலைகளையும் எட்டு கண்களையும் பெற்றான்.

மஹா அர்ணவ விகூர்ணிதம் கமலம் ஏவ தத் கேவலம்
விலோக்ய தத் உபாச்ரயம் தவ தனும் து நாலோகயன்
க ஏவ கமல உதரே மஹதி நி: ஸஹாயோஹ்யஹம்
குத: ஸவித் இதம் அம்புஜம் ஸமஜநி இதி சிந்தாம் அகாத்

பொருள் குருவாயூரப்பா! அத்தனை பெரிய கடலில் அந்தத் தாமரை மட்டும் தனியே அசைவதை ப்ரம்மன் கண்டான். அந்த தாமரைக்கு ஆதாரமாக இருந்த உனது திருமேனியை அவனால் காண இயலவில்லை. அவன், “இத்தனை பெரிய கடலில் தனியாக அமர்ந்துள்ள நான் யார்? இந்த மலர் எங்கிருந்து உருவானது?”, என்று எண்ணியபடி அமர்ந்தான்.

அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிம் அபி காரணம் ஸம்பவேத்
இதி ஸ்ம க்ருத நிச்சய: ஸ: கலு நாலாரந்த்ராத் வநா
ஸ்வயோக பல வித்யயா ஸமவரூடவாந் ப்ரௌடதீ:

த்வதீயம் அதிமோஹனம் ந து கலேபரம் த்ருஷ்டவாந்

பொருள் – குருவாயூரப்பா! மிகுந்த அறிவு கொண்டவனாக உன்னால் படைக்கப்பட்ட ப்ரம்மன், அந்த தாமரை தோன்றுவதற்கு ஏதோ ஒரு காரணப் பொருள் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தான். தனது யோக சக்தியாலும் ஞானத்தாலும் அந்த தாமரை மலரின் தண்டில் உள்ள த்வாரம் வழியே கீழே சென்றான். ஆயினும் உனது திருமேனி அவனுக்குப் புலப்படவில்லை.

தத: ஸகல நாலிகா விவர மார்க்க: மார்கயந்
ப்ரயஸ்ய சத வத்ஸரம் கிம் அபி நைவ ஸந்த்ருஷ்டவாந்
நிவ்ருத்ய கமலோதரே ஸுக நிஷண்ண: ஏகாக்ரதீ:
ஸமாதி பலம் ஆததே பவத் அநுக்ரஹை காக்ரஹீ

பொருள் – குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த தாமரையின் தண்டில் உள்ள பல த்வாரங்களிலும் நுழைந்து நூறு தேவ வருடம் உன்னைத் தேடினான். ஆயினும் அவனுக்கு நீ புலப்படவில்லை. பின்னர் தனது தேடுதல் முயற்சியைக் கைவிட்டு, அந்த மலரின் மீது சுகமாக அமர்ந்து, உன்னுடைய அனுக்ரஹத்தைப் பெற விரும்பி ஸமாதி நிலையில் அமர்ந்தான்.

ஸபஸ்வ புவநத்ரயீ ரசன தக்ஷதாம் அக்ஷதாம்
க்ருஹாண மத் அனுக்ரஹம் குரு தபச்ச பூயோ விதே
பவது அகில ஸாதநீ மயி ச பக்தி: அத்யுத்கடேத்
உதீர்ய கிரம ஆததா: முதித சேதஸம் வேதஸம்

பொருள் – குருவாயூரப்பா! அவனுடைய தவ வேண்டுகோளைக் கேட்ட நீ அவனிடம், “ப்ரம்மனே! குறைவற்ற மூன்ரு உலகங்களையும் ஸ்ருஷ்டிக்கும் வலிமையை நீ பெறுவாயாக. எனது அருளைப் பெறுவாயாக. மறுபடியும் உனது தவம் தொடங்கட்டும். என்னிட்த்தில் தீவிரமாகவும் அனைத்தையும் முடிக்கும் திறனுள்ளதாகவும் இருக்கும் பக்தி உனக்கு உண்டாவதாக”, என்றாய். இப்படியாக அவனை நீ மகிழ்வில் ஆழ்த்தினாய்.

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: