ஸ்ரீபாஞ்சராத்ரம் – 19
24-09-2009
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி
மீண்டும் ஒரு நெல்லிக்காய் அளவு நதியினில் நாம் குளிக்குமிடத்திலுள்ள மண்ணை எடுத்து சூரிய கிரணங்களிடத்துக் காண்பித்து, ஒருக்கால் சூரியகிரணங்களை மேககூட்டம் மூடி அந்த கிரணங்கள் இல்லையென்றால் மனதில் அந்த மண்ணின் மீது சூரிய கிரணங்கள் படுவதாக மனதினால் பாவித்து, நம் உடலின் அனைத்து அங்கங்களையும் அந்த மண் கொண்டு தொட வேண்டும். பின்னர் கவச மந்திரம் சொல்லி நம் அங்கங்கள் மற்றும் கையிலுள்ள மண்துகள்களைப் போக்கிக் கொள்ளவேண்டும்.
பின்னர், வலது கையினால் ஒரு தர்பமுஷ்டியை எடுத்துக் கொண்டு ஒடும் ஜலத்தில் “அப்பு சூக்த“ மந்திரத்தினால், ஜலத்தினைச் சுற்றி பின்பு உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாய் குவித்து கும்பம் போல் வைத்துக் கொண்டு, அப்படியே இருகைகளினாலும் ஜலம் எடுத்து தலை, காதுகள், கண்கள், முகம் மற்றுமுள்ள அங்கங்களை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஜ்யோதிர்மயமான நம் ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் ஹரியைத் தியானம் செய்ய வேண்டும். புருவ மத்தியில் எம்பெருமானைத் த்யானிக்கவும்.
இது “அகமர்ஷண ஸ்நானம்“ எனப்படும். இது அனைத்து பாபங்களையும் போக்கக் கூடியது.