ஸ்ரீபாஞ்சராத்ரம் – 18
19-09-2009
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி
நதியினில் நீராடுவதற்கு முன் முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நீரில் மூழ்க வேண்டும்.
நம் சரீரம் நன்கு நனைந்த பின்பு முதலில் கோமயம் கொண்டு உடம்பை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மண் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பு அல்லது உளுந்து ஆகியவைகளின் மாவுப்பொடியினைக் கொண்டு தேய்த்துக் கொள்ள வேண்டும். கவச மந்திரத்தினைச் சொல்லியபடியே நீராட வேண்டும். பின்பு ஹ்ருண் மந்த்ரத்தினை உச்சரித்தப்படியே கந்த பொடிகளைக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
ஒரு நெல்லிக்காய் அளவு நதியிலுள்ள ஈரமண்ணை எடுத்து இடது கை மணிக்கட்டின் அருகில் வைத்துக் கொண்டு அஸ்த்ர மந்த்ரம் மற்றும் மூல மந்த்ரம் முதலானவற்றை உச்சரித்தப்படி அந்த மண்ணை ஸ்பர்ஸித்து, அந்தமண்ணில் ஒரு பாகத்தினை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள ஒரு பாகத்தினை நாம் நிற்கின்ற இடத்தினில் விட வேண்டும். கையிலுள்ள ஒரு பாகத்தினை இரண்டாக பண்ணி இதில் ஒரு பாகத்தினை நதியினில் சேர்த்தும், மீதமுள்ள ஒரு பாகத்தினை உடம்பினை தேய்த்து பின்னர் நீராடுதல் வேண்டும். இம்மாதிரி செய்வதனால் அந்த தீர்த்தத்தினில் கங்கை, யமுனை, ப்ரயாகை, சக்ர தீர்த்தம், ப்ரபாயம், புஷ்கரம் முதலான தீர்த்த சக்திகள் அனைத்தும் அங்கே சூக்கும ரூபத்தில் வந்து விடும்..!
மேலும் ஸ்நானத்திற்கு உண்டான இடைஞ்சல்கள் பலமற்று போய்விடும்..