ஸ்ரீ பாஞ்சராத்ரம் – 02
26.06.2009
பாரமேஸ்வர ஸம்ஹிதை (1,39-41) சொல்கிறது.
“அடர்ந்த இருளைப்போன்று, பஞ்சபூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய பிரகிருதியின் சம்பந்தமுடைய அனைத்தும் உண்மை நிலையறியாது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த அஞ்ஞானத்தினை அகற்றி, ஞானவிளக்கேற்ற வந்த தீபமே பாஞ்சராத்ரம்“ என்கிறது.
விஸ்வாமித்ர ஸம்ஹிதை (2.3.5) சொல்கிறது
பஞ்சேந்திரியங்களினால் இயங்கும் இந்த மனிதனுக்கு “பஞ்சரா“ என்று பெயர். இந்த பஞ்சேந்திரியங்களினாலும் எது அறியப்படவேண்டுமோ, எது அடையப்பட வேண்டுமோ, அதற்கான வழிமுறையை வகுத்து அவனை வழிநடத்திக் கொண்டுபோகும் சக்தி “பாஞ்சராத்ரம்“ என்கின்றது.
புருஷோத்தம ஸம்ஹிதை (1.4) சொல்கிறது
பக்தி ஒன்று மட்டுமே ஒருவனை பிறவிதனிலிருந்து விடுவிக்கக்கூடியது. இந்த பக்தியை ஊட்டுவது, பரப்புவது பாஞ்சராத்ரம் என்கிறது.
பிள்ளைலோகாச்சாரியாரின் “முமுக்ஷுபடி“ வ்யாக்யனத்திற்கான மாமுனிகளின் அவதாரிகையில் மாமுனிகள் கூறுகின்றார். இவர் பாஞ்சராத்ரத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லையானாலும் இங்கு இத்தருணத்தில் நினைவுகூறத் தக்கது..
“நித்யசூரிகளோ பாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்யரஸராய் வாழ்க்கைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும், அத்தை இழந்து “அஸன்னேவ” என்கிறபடியே அசத் கல்பராய் கிடக்கிற ஸம்ஸாரி ஸேதனருடைய இழவை அனுசந்தித்து அத்யந்த வ்யாகுல சித்தனாய் இவர்கள் கரண களேபரங்களை இழந்து, இறகொடிந்த பட்சிப் போல கிடக்கிற தசையிலே, கரணாதிகளைக் கொடுத்து…….”
பகவானை அனுபவிக்க முடியாது அசக்தராய் அஞ்ஞானத்தில் உழன்று, சிறகொடிந்த பறவை போல தவிக்கின்ற ஸம்ஸாரிகளை, நித்யசூரிகளைப் போன்று நித்யம் கைங்கர்யம் செய்யும் ஆசையுண்டாகி, அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு “ப்ராப்தி“ உண்டாக, இந்த வாழ்க்கையில் கடைத்தேற, இந்த சேதனருடைய
வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலையினால் பகவான் கவலைப்பட்டுக் கொண்டே யோசித்து. அவர்கள் உய்யும் வழிக்கான ஞானத்தினை அளிக்கின்றான் என்கிறார்.
பாஞ்சராத்ரம் இந்த உலகம் உய்யும் வழிக்கான ஞானம். இந்த ஜீவன்கள் கடைத்தேற பகவானாலேயே அருளப்பெற்ற வழிமுறை.
எல்லாமுமாய் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஏகமாய் நிற்கும் அவனைத் தொழும் வழிக்கு, நம்மை அழைத்துச் செல்லும் அயனம் (பாதை) – அதாவது “ஏகாயனம்”.