ஸ்ரீபாஞ்சராத்ரம்-01
ஸ்ரீ:
ஸ்ரீபாஞ்சராத்ரம்
நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்
இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.
என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?
உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி, அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய, சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன். சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!
இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்! இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான். ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.
விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.
பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.
நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.
“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.
“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.
இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.
எது அறியாமை..?
எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!
எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!
பாஞ்சராத்ரம் சொல்கின்றது..
“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”
”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே. நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.
மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !
பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்! இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும், இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்! ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.