CHAPTER-67
27.04.09
ஸ்ரீபாதுகைகள் பர, வ்யூஹ ரூபத்திலிருந்தாலும், ஸ்ரீபகவான் ராமனாக மனுஷ்ய அவதாரம் எடுத்த காலத்திலும், இப்போது ஸ்ரீரங்கவிமானத்தில் அது அர்ச்சவதாராமாயிருக்கும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் கீழ் இணைபிரியாதுயிருக்கும் போதும் அதனுடைய ரக்ஷிக்க்க்கூடிய சக்தி எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் தொய்வில்லாதது. குன்றாத வலிமை கொண்டது. அதனால்தான் புத்திசாலியான பரதன் அதனை இராமனிடத்துப் பிரார்த்தித்துப் பெற்றான். நம்பெருமாளின் திவ்யபாதுகைகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மிகுந்த வலிமையோடு விளங்கக் கூடியது.
இது போன்றுதான் நித்யசூரிகளாய் இருந்தபோதும், ஸதாச்சார்யர்களாய், ஆழ்வாராய் அவதரித்த காலத்திலும், இப்போது அர்ச்சாரூபியாயிருக்கும் போதும், ஆழ்வார் ஆச்சார்யர்கள் குறைவேயில்லாதவர்கள். மிகுந்த மஹிமைப் பொருந்தியவர்கள். ஜீவன்களுடைய ஸர்வ தொந்திரவுகளையும் போக்கி, ஸர்வ அபீஷ்டங்களையும் தரவல்லவர்கள். ஸர்வ லோகங்களிலும் ஸ்துதி, கீர்த்தன, வந்தானாதிகளால் பூஜிக்கத் தக்கவர்கள்.
இவர்களுடைய பிரார்த்தனையால்தான் பகவான் நம்மிடையே இருக்கின்றார். இருக்குமிடம் தேடி வருகின்றார். இவர்களுடைய உபதேசங்களினால்தான் ஆஸ்ரிதர்களின் மனம் தெளிவடைகின்றது.
மனம் இருட்டடையாமல் நற்குணங்களால் நிரம்புகின்றது. பெருமாள் வந்தமரும் மகரந்தமாய் மாறுகின்றது.
ஆச்சார்யன் தங்களுடைய தேஜோமயமான ரூபத்தினாலும், பரம கருணையினாலும், வாத்ஸல்யத்தினாலும், எல்லாரிடத்திலும் அவர்களுடைய தாய் தந்தையரைக் காட்டிலும் வெகுவாக அன்பு காட்டி அவர்கள் கடைத்தேற வழிகாட்டுபவர்கள்.
சரம் அசரம் ச நியந்து: சரணாவநிதம்பரேதரா சௌரே
சரம புருஷார்த்தசித்ரௌ சரணவநி! திசஸி சத்வரேஷுஸதாம் !!950 !!
சரணாவநி=பகவானுடைய திவ்ய சரணங்களைக் காப்பாற்றும் பாதுகையே!-
அனிதம்பரேதரா=இந்த காரியத்தினை முக்கிய கவனத்துடன் கவனித்துக் கொண்டு – சரம்=ஜங்கம வஸ்துக்களையும் – அசரம்=ஸ்தாவர வஸ்துக்களையும் – நியந்து:=ஏவுகிறவராகயிருக்கின்ற – சௌரே=ஸ்ரீரங்கநாதனுடைய — சரம=கடைசியான – புருஷார்த்தம்=புருஷார்த்தத்தினுடைய – சித்=ஞானத்தை – ரௌ=காப்பாற்றுகிறவராகயிருக்கின்ற – சரணௌ=திருவடிகளை – ஸதாம்=முமுக்ஷக்களுடைய – ஸத்வரேஷு=வீட்டினுள் (பூஜாபிரதேசங்களில்) — திசஸி=அழைத்துச் செல்கிறாய்.
பரம ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களது கிரஹங்களில் பகவானையும் பாதுகையையும் அர்ச்சாரூபமாக ஆராதனம் செய்வார்கள். மிகவும் அகிஞ்சனரான அந்த ஸ்ரீவைஷ்ணவரின் பூஜா அறைகளில் அவர்களால் ஆராதிக்கும்படி அரங்கனை பரமசுலபமாக எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து விடுகின்றாய்! உனக்கும் உன்னோடு எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கும் அவர்கள் செய்யும் சிரத்தையான ஆராதனங்களினால், அவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களுள் முதல் மூன்றில் புத்தி செலவிடாமல் பண்ணி, கடைசி புருஷார்த்தமாகின்ற மோக்ஷ விஷயத்தில் ஞானத்தையும், விருப்பத்தையும் கொடுத்து அவர்களை இப்பிறவியிலிருந்து காப்பாற்றி விடுகின்றாய்! உன் அனுக்ரஹத்தினால்தான் பகவானது ஸம்பந்தமும், மோக்ஷ உபாயமும் ஆஸ்ரிதர்களுக்கு சாத்தியமாகின்றது. உன்னுடைய இந்த தயாகுணமானது ஆச்சர்யகரமானது!.
ஸ்ரீரங்கநாதன், எப்படிப்பட்ட பாபிகளையும் காப்பாற்றி கரைசேர்ப்பதிலேயே ஊக்கமுடைய பாதுகையை, இந்தவொரு விஷயத்தில் தன்னை எதிர்பார்க்காதபடிக்கு, பாதுகைக்கு ஸர்வ சுதந்திரமும் அளித்து, அந்த பாதுகைகளே தானே ரக்ஷிக்கும்படியான எஜமானியாக செய்து, இந்த ஒரு விஷயத்தில் பாதுகையின் இஷ்டத்தையெல்லாம் அங்கீகரித்துக் கொண்டு, அதற்கு ஆதரவாகவே எழுந்தருளியுள்ளார்.